திருப்பூரில் பனியன் சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி காதர்பேட்டை பகுதியில் காலி இடத்தில் தற்காலிகமாக கடைகள் அமைத்து 50 வியாபாரிகள் ஆடைகளை விற்று வந்தனர். பனியன் துணிகள் அதிகமாக இங்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி பனியன் சந்தை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அந்த மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளது. தற்பொழுது வரை இந்த விபத்தில் எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் 50 கடைகள் எரிந்துள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது வியாபாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.