தென்காசி புதிய மாவட்டம் நவ 22- ஆம் தேதியன்று உதயமானது. முறைப்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
தென்காசி புதிய மாவட்ட அறிவிப்பும், தொடர்ந்து பகுதிகள் இணைப்பு வரையரைகள் வெளியானதையடுத்து தங்கள் பகுதிகளை தென்காசியுடன் இணைக்கக் கூடாது நெல்லையுடனே நீடிக்க வேண்டும் என்று பல பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அம்பை அருகேயுள்ள பாப்பாக்குடி யூனியனின் அடைச்சாணி, இடைகால், பள்ளக்கால் பொதுக்குடி, ரங்க சமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளின் கிராமங்களின் மக்கள், தாங்கள் அரைமணி நேரத்தில் நெல்லை சென்றடைவதை விடுத்து ஒன்றரை மணிநேரம் சுற்றி வந்ததற்கு, பின் தென்காசி வந்தடைய நேரமாகும். எனவே எங்கள் பகுதி நெல்லையுடனேயே நீடிக்க வேண்டும். தவறினால் எங்களின் குடும்ப ரேஷன் அட்டைகள், வாக்காளர் அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் என்று அறிவித்தனர். அம்மக்களின் எதிர்ப்பையும் மீறி அப்பகுதிகள் இணைக்கப்பட்டது.
அதையடுத்து நேற்று (04.12.2019) பதினோரு கிராம மக்களும் தங்களின் பிள்ளைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு அனுப்பாமல் புறக்கணித்துவிட்டு பள்ளக்கால் பொதுக்குடி பஞ்சாயத்து முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த தென்காசி கோட்டாட்சியர் பழனிகுமார், தாசில்தார் சண்முகம், டி.எஸ்.பி.ஜாகிர் உசேன் மற்றும் வருவாய் துறையினர் வந்து போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எங்களது ஜீவாதாரமே பாதிக்கப்படுகிற வகையில் மாவட்டப் பிரிவினை அமைந்துள்ளது. குழந்தைகளின் சான்றிதழ்களுக்குக் கூட தினமும் அலைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து தங்களின் நிலைபாட்டில் உறுதியாய் இருந்ததால், அதிகாரிகள் எதுவும் சொல்ல இயலாமல் புறப்பட்டுச் சென்றனர். இதன்காரணமாக இந்தப் பகுதியின் பள்ளிகள் அனைத்தும் மாணவர்களின்றி வெறிச் சோடிக்கிடந்தன.
அதை தொடர்ந்து மாவட்டக் கலெக்டரைச் சந்திக்கச் சென்ற பொதுமக்கள், ஆட்சியர் எங்களுக்கு நல்ல தகவலைச் சொல்லாவிட்டால் புறக்கணிப்பு தொடரும் என்கின்றனர். மக்களின் நலனே முதன்மையானது என்பதையே வெளிப்படுத்துவதாக இருக்கிறது இம்மக்களின் மன உறுதி.