கடவுளை போல் கருணை உள்ளத்தோடு பணி செய்யும் செவிலியர்களை போற்ற வேண்டும் என்பதோடு, தற்காலிக பணியில் உள்ள அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விரிவான கடிதத்தை மின் அஞ்சலில் அனுப்பியுள்ளார், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மக்கள் ஜி ராஜன். மேலும் அவரது கடிதத்தில்,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பரவி, குறிப்பாக தமிழகத்தில் ஏறத்தாழ 1300 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது மேலும் தொடராமல் இருக்க பல்வேறு வகைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகம், அரசு சார்ந்த நிர்வாகங்கள் உதவி செய்து கொண்டிருக்கக்கூடிய அனைத்து துறை அலுவலர்கள் என அத்தனைபேரையும் முதலில் மனப்பூர்வமாக பாராட்டுகின்றோம். குறிப்பாக எங்கள் ஈரோட்டில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சதவிகிதம் பேர் குணமடைந்து அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கின்றார்கள். ஆனால், தமிழகத்தில் தற்காலிகமாக பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய ஏறத்தாழ 8000 செவிலியர்கள் தங்களது உயிரை பனையம் வைத்து இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாத்து அதிலிருந்து மீட்டு எடுத்து அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த செவிலியர்கள் தங்களது குடும்பத்தை, குழந்தைகளை, உறவினர்களை விட்டு, இன்றைக்கு தனிமையாக அந்த நோயாளிகளோடு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதலமைச்சரான நீங்கள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது நன்கு அறிவோம். குறிப்பாக சுகாதார துறை அமைச்சர் மற்றும் சுகாதார துறை செயலாளர் அவர்களும், மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் இன்றைக்கு இந்த மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து கரோனா வைரஸை தமிழகத்தை விட்டு துரத்த வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களோடு மிக முக்கிய பங்காக செயலாற்றிக் கொண்டிருக்கும் செவிலியர்களும் இருக்கின்றார்கள், எனவே முதல்வர் இந்த சூழ்நிலையில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களை அதாவது செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அரசு மருத்துவர்கள், மருத்துவமனைக்கு சென்று சற்று நேரங்களில் பணியை முடித்து செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கூறி விட்ட பிறகு தங்களது இருப்பிடத்திற்கு அல்லது தனது அறைக்கு சென்று விடுகிறார்கள். ஆனால் செவிலியர்கள் 24 மணி நேரமும் நோயாளிகளுடன் இருந்து அனைத்து விதமான சிரமங்களையும் சந்தித்து, தன் உயிரைக்கூட துச்சமென நினைத்து அரசு வழங்கக்கூடிய தற்காலிகமான பதினைந்தாயிரம் ரூபாய்க்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 2015 - இல் இருந்து தற்காலிகமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் செவிலியர்கள் அதிக அளவில் இன்றைக்கு சிரமமான பணியை செய்கிறார்கள். காரணம் செவிலியர் என்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள், என்றும் இன்முகத்தோடு ஒரு நோயாளியை அணுகி, செவிலியரின் அணுகுமுறை பாதி இருந்தால்கூட அந்த நோயானது அந்த உடலை விட்டு இருந்த இடம் தெரியாமல் சென்றுவிடுகிறது.
எனவே முதல்வர் அவர்கள் இந்த வேண்டுகோளை பரிசீலித்து எந்தவிதமான நாளையும் கடத்தாமல் உடனடியாக ஏறத்தாழ 8000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவர்களுக்கு ரிஸ்க் அலவன்ஸ் உடனடியாக கொடுக்க வேண்டும், மத்திய அரசினுடைய ஊதியத்தை போன்று மாநில அரசும் செவிலியர்களுக்கு வழங்கவேண்டும்" என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.