நாமக்கல் அருகே, குழந்தை விற்பனை விவகாரத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவல்லி, சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் அமுதவல்லி உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கை தற்போது சேலம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே அமுதவல்லி உள்ளிட்ட சிலரை காவலில் ஏடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அமுதவல்லியுடன் கூட்டு சேர்ந்து, சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்ததில் முக்கிய பங்கு வகித்த இடைத்தரகர்கள் ஈரோட்டைச் சேர்ந்த அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர் மூன்று பேரும் தங்களை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி இளவழகன் முன்னிலையில் மே 15ம் தேதி (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பு வழக்கறிஞர், அவர்களுக்கு ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்றுகூறி, முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.