Skip to main content

எந்த கோவிலிலிருந்தும் ஒரு செங்கல்லைக்கூட அகற்றக்கூடாது! -இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

temples chennai high court

 

 

தமிழகத்தில் உள்ள கோவில்கள் சீரமைப்பு பணிகளுக்காக குழு அமைப்பது தொடர்பான வழக்குகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, மனுதாரர்களில் ஒருவரான ரங்கராஜன் நரசிம்மன், கரூர் மாவட்டம், கார்வழி என்ற இடத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவிலை இடிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாக நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

 

இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த கோவில் எதற்காக இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது? இதுபோல் எத்தனை கோவில்களை இடிக்க அறநிலையத்துறை திட்டம் வைத்துள்ளது? என்று கேள்விகளை எழுப்பினர்.

 

இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், இந்த கோவிலை இடிப்பதற்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

 

தொடர்ந்து நீதிபதிகள், இந்த கோவில் மட்டுமல்லாமல், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த கோவிலிலும் ஒரு செங்கல்லைக்கூட அகற்றக்கூடாது என்றும், இதை அறநிலையத்துறை ஆணையர் மூலம் இணை ஆணையர் மற்றும் அனைத்து கோவில் செயல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 18- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்