கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியில் குளத்து ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் வீரமலை, மகன் நல்லதம்பி ஆகியோரை அந்த பகுதியை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் கூலி படை துணையோடு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தானாக முன்வந்து விசாரித்தது.
கருத்து தெரிவித்த ஐகோர்ட், ஆக்கிரமிப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் மெத்தனமான போக்கே நீர்நிலைகள் ஆக்கிரமிப்பிற்கு காரணம். நிறைவேற்றப்படாத உத்தரவுகளின் கீழும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முதலைப்பட்டி ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? அதில் எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? ஆக்கிரமிப்புக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குளித்தலை போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏரி ஆக்கிரமிப்பு குறித்து வருவாய் ஆய்வாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள ஐகோர்ட் கிளை, இவ்வழக்கின் விசாரணையை ஆக.,14 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில் திடீர் என தோகமலை இன்ஸ்பெக்டர் இஸ்திரிஸ் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் குளித்தலை ஆர்.டி.ஓ. லியாத் , சூரியபிரகாஷ் தலைமையில் 3 பெரிய பொக்கலின் இயந்திரத்துடன் இன்று முதலைப்பட்டியில் உள்ள பெரிய குளத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 39 ஏக்கர் இடத்தை மீட்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். இங்கு குளத்து ஆக்கிரமிப்பில் இருக்கும் பண்ணை தோட்டம், கோவில், வண்டி சாலை உள்ளிட்ட இடங்களை விட்டு விவசாயம் செய்த பகுதிகளை மீட்டுக்கொண்டிருக்கிறார்கள்.