கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வு மூலம் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா மும்பையில் நீட்தேர்வு எழுதியதின் மூலம் தேர்ச்சி பெற்றார் என்ற அடிப்படையில் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார்.
ஆனால் மும்பையில் நீட்தேர்வு எழுதியது உதித்சூரியா இல்லை என்றும், அதற்கு பதிலாக ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி இருக்கிறார் என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆள்மாறாட்டம் மூலம் உதித்சூரியா கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. அதன் பேரில் கல்லூரி முதல்வரின் புகாரின் பேரில் உதித்சூர்யாவையும் ஆள்மாறாட்டம் செய்த மற்றொரு மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு அந்த இருவரையும் கைது செய்வதற்காக எஸ்பி பாஸ்கரன் இரண்டு தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார். அதைக்கண்டு சென்னையைச் சேர்ந்த மாணவன் உதித்சூரியாவும் ஆள்மாறாட்டம் செய்த நபரும் தலைமறைவாகி விட்டனர்.
இது சம்பந்தமாக நாம் விசாரணையில் இறங்கிய போது...
ஆள்மாறாட்டம் மூலம் தேனி மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவன் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னையில் அரசு மருத்துவராக இருந்து வருகிறார் .அதுபோல் தேனி மருத்துவக் கல்லூரியில் முதல்வராக இருக்க கூடிய ராஜேந்திரன் ஏற்கனவே சென்னையில் டாக்டராக பணி புரிந்தபோது இருவரும் நண்பர்களாக பழகி வந்திருக்கிறார்கள். இந்தநிலையில்தான் தனது நண்பர் தேனி மருத்துவ கல்லூரி முதல்வராக இருப்பதை வைத்துதான் டாக்டர் வெங்கடேசன் தனது மகன் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியது தெரியக்கூடாது என்பதற்காக தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார். ஆனால் உதித்சூர்யா கல்லூரியில் சேரும் போதே சான்றிதழை சில பேராசிரியர்கள் சரிபார்த்தனர் அப்போது நீட்தேர்வு ஹால் டிக்கெட்டில் உள்ள படத்திற்கும் உதித்சூர்யா படத்திற்கும் வேறுபாடுகள் இருக்கிறது அதன் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருக்கலாம் என்று கல்லூரி முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் உதித் சூர்யா மேல் பெட்டிஷன் வந்ததின் மூலம் ஆள்மாறாட்டம் செய்தது வெளியே தெரியவந்தது. உடனே தனது நண்பர் டாக்டர் வெங்கடேசனை வரவழைத்து ஆள் மாறாட்டம் செய்தது வெளியே தெரிந்து விட்டது அதனால் இனிமேல் உதித் சூர்யா இங்கு படிக்கவும் முடியாது அவனுடைய வாழ்க்கையும் வீணாகிவிடும் அதனால் இனிமேல் படிப்பை தொடர விருப்பம் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு பையனை கூட்டி கொண்டு போய்விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில்தான் உதித்சூர்யாவும் படிக்க விருப்பம் இல்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு போய்விட்டார். அதன்பிறகு இந்த விஷயம் மீடியாக்கள் மூலம் வெளியே தெரியவும்தான் வேறு வழியில்லாமல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அந்த அளவுக்கு தன் நண்பரின் மகன் ஆள்மாறாட்டம் மூலம் கல்லூரியில் சேர்ந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று கல்லூரி முதல்வர் ஒருபுறம் மூடி மறைக்க முயற்சி செய்து இருக்கிறார் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டும் வருகிறது. நீட் தேர்வில் இப்படியொரு மூலம் ஆள் மாறாட்டம் செய்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.