ஆத்தூர் அருகே, ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர், ரம்மி சூதாட்டத்திற்காக மூதாட்டியை தாக்கி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்த பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (80). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி நல்லம்மாள் (72). இவர்கள் இருவரும் தங்களுடைய விவசாயத் தோட்டத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் 1ம் தேதி, வாலிபர் ஒருவர் அவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அவர்களுக்குச் சொந்தமான பாக்குத் தோப்பை குத்தகைக்கு கேட்க வந்திருப்பதுபோல் பேச்சுக் கொடுத்தார். இந்த பேச்சுவார்த்தைக்கு இடையே அங்கமுத்து எங்கேயோ அவசரமாக வெளியே செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். அப்போது, மூதாட்டி நல்லம்மாள் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த அந்த வாலிபர் திடீரென்று, அவரை கத்தியால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என மொத்தம் 17 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஆத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதில், ஆத்தூர் பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (28) என்ற வாலிபர்தான் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
அவரை காவல்துறையினர், கடந்த மார்ச் 30ம் தேதி கைது செய்தனர். மூதாட்டி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 17 பவுன் நகைகளையும் ஆத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. அந்த நகைகளை காவல்துறையினர் மீட்டனர். மேலும் அவரிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றினர்.
பிடிபட்ட கண்ணனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், “பாக்கு மரங்களை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வந்தேன். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பாக்குத் தொழில் மூலம் கிடைத்த பணத்தை ரம்மி விளையாட்டில் முதலீடு செய்தேன். ஆரம்பத்தில் எனக்கு ஆன்லைன் ரம்மியில் லாபம் கிடைத்தாலும், போகப்போக எனக்கு 30 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. ஆனாலும் இந்த சூதாட்டத்தை என்னால் விட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் கையில் பணம் இல்லாததால், எங்காவது திருடியாவது ஆன்லைன் ரம்மியை விளையாட முடிவு செய்தேன். இந்த நேரத்தில்தான் அங்கமுத்துவின் வீட்டுக்கு பாக்குத் தோப்பை குத்தகைக்கு எடுப்பது போல் விசாரிக்கச் சென்றேன். அப்போது அவர் வெளியே கிளம்பிவிட்டதால், தனியாக இருந்த நல்லம்மாளை தாக்கி, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டேன்.
அந்த நகைகளை 6 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டேன். கிடைத்த பணத்தில் 3 லட்சம் ரூபாயை கடனை அடைக்கவும், மீதம் இருந்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் முதலீடு செய்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து கண்ணனை காவல்துறையினர் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.