
கான்க்ரீட் கலவை இயந்திர லாரி மோதி சென்னையில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை தரமணியில் உள்ள தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு. மென் பொறியாளராகப் பணியாற்றி வந்த ரகு, இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹேமலதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹேமலதா கிண்டியில் உள்ள செல்லம்மாள் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வந்தார். இந்நிலையில் இருவரும் இன்று காலை பெரம்பூரில் உள்ள பெற்றோரின் வீட்டுக்குச் செல்லத் திட்டமிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அடையாறு எல்.பி சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கான்க்ரீட் கலவை லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்பொழுது ஹேமலதாவின் தலை மீது லாரி ஏறியது. இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்த போதிலும் ஹேமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரகு படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
உடனடியாக ஹேமலதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு பீகாரைச் சேர்ந்த ஆசாத் ஆலம் என்ற கலவை லாரி ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர்.