உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய மாணவர் ஒருவரை, அடிப்பதற்கு சக வகுப்பு இந்து மாணவர்களை ஆசிரியை தாக்கச் சொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி மாநிலம், முசாஃபர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு பாட ஆசிரியையாக இருக்கிறார் திருப்தா தியாகி. இவரது கணக்கு பாடத்தில் சரியாக கற்கவில்லை என்று கூறி இஸ்லாமிய மாணவர் ஒருவரை நிற்க வைத்து சக வகுப்பு இந்து மாணவர்களை அடிக்கச் சொல்லி தூண்டியுள்ளார். பின்னர் ஆசிரியையின் பேச்சைக் கேட்டு மாணவர்கள் இஸ்லாமிய மாணவரை ஒருவர் பின் ஒருவராகத் தாக்குகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வீடியோவில், ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள். வேகமாக அடியுங்கள் என்றதோடு இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தியும் ஆசிரியர் திருப்தா தியாகி பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் முசாஃபர் மாவட்ட எஸ்.பி, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாணவர் தாக்கப்படும் வீடியோவை யாரும் பகிர வேண்டாம். இது குறித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளோம் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு பலரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆசிரியையின் செயலுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனிதமான இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது, ஒரு ஆசிரியரால் இதைவிட மோசமான காரியத்தை நாட்டிற்கு செய்ய முடியாது. இதே மண்ணெண்ணெய்யை வைத்துதான் பாஜகவினர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீ வைத்துள்ளனர். குழந்தைகள் தான் இந்தியாவின் எதிர்காலம். நாம் அனைவரும் அவர்களுக்கு அன்பைக் கற்பிக்க வேண்டும்; வெறுப்பை அல்ல” எனக் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.