சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள பெரிய சிறுவாச்சூரைச் சேர்ந்தவர் தேவேந்திரன். அரசுப்பள்ளி ஆசிரியர். நரிப்பாடியில், வனப்பகுதியை ஒட்டி தேவேந்திரனுக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அவருடைய மனைவி புஷ்பவள்ளி, அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பிப். 23ம் தேதிமுதல் மே மாதம் 6ம் தேதிவரையிலான காலகட்டத்தில், ஆசிரியர் தேவேந்திரன் அவருடைய நிலத்திற்குச் செல்ல வனப்பகுதியை வழித்தடமாக பயன்படுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போதைய தம்மம்பட்டி வனச்சரகர் அசோக்குமார், வனக்காப்பாளர் கிருஷ்ணராஜ், வனக்காவலர் மணிவேல் ஆகியோர் தேவேந்திரனிடம் விசாரணை நடத்தினர்.
வனப்பகுதியை ஆக்கிரமித்ததாகத் தேவேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, அவரிடம் லஞ்சம் பெற்றதாக புகார்கள் கிளம்பின. அதேநேரம், வனத்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையும் எடுத்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் தேவேந்திரன், சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார். இதில், வனத்துறை அதிகாரிகள் தேவேந்திரனிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து வனச்சரகர் அசோக்குமார், வனக்காப்பாளர் கிருஷ்ணராஜ், வனக்காவலர் மணிவேல் ஆகிய மூவர் மீதும் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.