டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான ரத்தன் டாடா, வயது மூப்பு காரணமாக கடந்த 9ஆம் தேதி காலமானார். ரத்தன் டாடா மறைவுக்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு, மும்பை ஓர்லியில் உள்ள மயானத்தில், துப்பாக்கி குண்டுகள் முழங்க, ரத்தன் டாடாவின் உடல் அரசு மரியாதையுடன் இறுதிசடங்குகள் செய்யப்பட்டது. இதனையடுத்து, ரத்தன் டாடா வகித்து வந்த டாடா அறக்கட்டளைக்கு, அவரின் சகோதரர் நோயல் டாடா, தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமான ரூ.10,000 கோடி சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்று அவர் எழுதிய உயில் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தன் பெயரில் உள்ள சொத்துக்களை, வளர்ப்பு நாய் உள்பட தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் ரத்தன் டாடா உயில் எழுதி வைத்துள்ளார். சகோதரர் ஜிம்மி டாடா, சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஜீஜாபோய், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பிறருக்கும் சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளார்.
அதன்படி டிட்டோ என்ற பெயரிடப்பட்ட ரத்தன் டாடாவின் செல்ல வளர்ப்பு நாய்க்கு தனது சொத்தில் ஒரு பங்கை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளார். மேலும், டிட்டோ என்ற நாய்யை, தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக்கொள்வார் என்றும், அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியிருப்பதாக உயிலில் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து, சமையல்காரர் ராஜன் ஷா, மூப்பது ஆண்டுகளாக ரத்தன் டாடாவுக்கு துணையாக இருந்த வீட்டுப் பணியாளர் பட்லர் சுப்பையா ஆகியோருக்கு சொத்தில் ஒரு பங்கை ரத்தன் டாடா ஒதுக்கியுள்ளார்.
ரத்தன் டாடாவின் இளம் வயது நண்பரும், உதவியாளருமான சாந்தனு நாயுடுவுக்கு, டாடா குட்ஃபெலோச் நிறுவனத்தில் இருந்து ஒரு பங்கை சொத்தாக ஒதுக்கியுள்ளார். மேலும், சாந்தனு நாயுடு வெளிநாட்டில் படிப்பதற்காக வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்துள்ளார். இப்படி, கடைசி வரை தனக்கு துணையாக இருந்த அனைவருக்கும், சொத்துக்களில் பங்களித்து ரத்தன் டாடா அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளார். டாடாவின் சொத்துக்களில் அலிபாக்கில் 2,000 சதுர அடி கடற்கரை பங்களா, மும்பை ஜூஹு தாரா சாலையில் இரண்டு மாடி வீடு, ரூ.350 கோடிக்கு அதிகமான வங்கி வைப்புத்தொகை, டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83% பங்குகள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.