அரசியல் சடுகுடு என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட், விஜய்யின் த.வெ.க. கட்சி முதல் மாநாடு குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் த.வெ.க. கட்சிக் கொடியில் பெரிய அளவிற்கு விளக்கம் இல்லை. கொடிக்காக அவ்வளவு நேரம் பேசவே கூடாது, கொடி தான் பேசவேண்டும். த.வெ.க. கொடி தி.மு.க. கட்சி கொடி அளவிற்கு எளிமையாக இல்லை. தி.மு.க மற்றும் அ.தி.முக.வை வீழ்த்திவிடலாம் என்று எளிதாக சொல்ல மட்டும்தான் முடியும். ஆனால் அதை செய்வதற்கான சரியான விஷயங்கள் இருக்க வேண்டும். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சாதரணமாக வந்துவிட்டது என்று நினைக்க கூடாது. அண்ணா கட்சி ஆரம்பிக்கும்போது அவருக்காக கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் கோஷமிட்டனர். அவர்கள் எல்லோரும் மிகப்பெரிய பேச்சாற்றல் மிக்கவர்கள். அப்போது இருந்த அந்த இளைஞர்கள் செய்த எழுச்சி போராட்டங்களால் பலர் கூட்டம் கூட்டமாக கட்சியில் வந்து இணைந்தனர். அதில் வழக்கறிஞர், டாக்டர் போன்ற படித்தவர்கள் தான் அதிகம். அப்படி உருவானதுதான் திராவிட இயக்கம். அதன் பிறகு சினிமா பார்த்தவர்கள் தனியாக சென்று அது அ.தி.மு.க. கட்சியாக உருவானது. இப்படி உருவான இரு கட்சிகளையும் அழித்துவிட்டு, சினிமாவில் இருந்து நேராக அரசியல் வந்த விஜய் முதல்வர் ஆவது என்பது எந்த வகையில் சாத்தியம்?
எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் காலத்தில் இருந்த சினிமா பார்வையாளர்கள் இன்று கிடையாது. இப்போது சோசியல் மீடியாவை ஓபன் செய்தாலே ஜி.பி. முத்து போன்ற ஆயிரக்கணக்கான சூப்பர் ஸ்டார்கள் இருக்கின்றனர். கமல் வரும்போதும் மற்ற நடிகர்கள் வரும்போதும் புது வாக்காளர்கள் வருவார்கள். ஆனால் இங்கு என்ன அரசியல் நடந்து வருகிறது? யாருக்கு ஆதரவு தர வேண்டும்? என்பதை இரண்டு மூன்று வருடங்களில் புரிந்துகொள்வார்கள். அதற்கேற்ப தலைவர்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியபோது அவர்களை நம்பிப் போனவர்களின் கதி இப்போது எப்படி இருக்கிறது? கொள்கை இருக்கிறது என்று நம்பி நடிகர்கள் பின்னாடி சென்றவர்களுக்கு இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
விஜய் தனது முதல் மாநாட்டில் அவர் பேனரை மட்டும் வைத்து புரட்சியாளராக ஆகலாமே? புதிய கருத்துகளை விஜய் முன்னெடுக்கலாமே? அதற்கு பதிலாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சமையம்மாள் இவர்களை பயன்படுத்த தேவையில்லை. அப்படி பயன்படுத்தினால் அதற்கான நோக்கம் சரியாக இருக்க வேண்டும். விஜய் அதிகாரத்திற்கு வந்த பிறகுதான் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவர் கட்சியில் வருவார்கள். த.வெ.க. கட்சிக்கு முதிர்ந்த அரசியல்வாதிகள் தேவை. ஏற்கனவே அரசியல் செய்பவர்களை வேண்டாம் என்று விஜய் முடிவெடுத்தால் பிறகு ஏன் மாநாடு கட் அவுட்டில் அரசியல் செய்தவர்கள் புகைப்படங்களை வைத்துள்ளார் என்ற கேள்வி எழும். உதயநிதி ஸ்டாலினையும் விஜய்யையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. உதயநிதி ஸ்டாலினின் பின்புலம் அரசியல். விஜய்யின் பின்புலம் சினிமா ஸ்டார். விஜய் வந்தால் வாக்கு பிரியும் என்று கருத்தில் நான் உடன்படவில்லை. ஏனென்றால் இது வரை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த ஒருவர் எந்த சூழலிலும் மற்ற கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். கூட்டணியை பொருத்துதான் வாக்குகள் சில நேரங்களில் மாறியிருக்கும். அதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.-வின் வாக்குகள் ஒரு காலத்திலும் மாறாது. மற்ற கட்சிகளும் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணிக்கு வந்துவிடும். புதிய வாக்காளர்கள் மட்டுமே விஜய்க்கு ஓட்டு போடுவார்கள். பின்பு சில காலங்களுக்கு பிறகு அந்த புதிய வாக்காளர்களும் தி.மு.க.வின் செயல்பாடுகளை பார்த்து தி.மு.க.வுக்கே ஓட்டு போட்டு விடுவார்கள்.
புதிய வாக்காளர்கள் மத்தியில் சினிமாவின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதே அளவிற்கு அரசியலும் இருக்கும். அவர்களுக்கு ‘தி கோட்’ திரைப்படத்திற்கு ரூ.150 கொடுத்து பார்க்க வேண்டும் என்பதும் பணம் கொடுத்தால் ஓட்டு போடக்கூடாது என்பதும் நன்றாகவே தெரியும். எம்.ஜி.ஆரைப்போல் விஜய் ஆக முடியாது என்று கூறவில்லை. அதற்காக சில வருடங்கள் உழைக்க வேண்டும். விஜய்க்கு இன்னும் நேரம் இருக்கிறது. மக்கள் பிரச்சனையென்றால் களத்தில் அவர்களுக்காக விஜய் நிற்பார் என்ற நம்பிக்கையை தர வேண்டும். அதன் பிறகு தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களுடன் சென்று தவறுகளை சட்டமன்றத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இப்படி பல வேலைகளை விஜய் செய்ய வேண்டி இருக்கிறது. அப்போதுதான் முதல்வராக ஆக முடியும். தவறுகளுக்கு ஆளும் கட்சியினர் இடம் கொடுத்தால்தான் விஜய் அரசியலில் பயணிக்க முடியும். அதுவரை பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பை மட்டும்தான் விஜய்யால் காட்ட முடியும். கேரளாவில் சினிமா ஸ்டார்களை மக்கள் ரசிப்பார்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் அவர்களை ஏற்க மாட்டார்கள். கல்வியில் தேறினவர்களாக இருப்பார்கள். அந்த கல்வி இப்போது தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது. விஜய் அரசியலுக்கு வந்தது அவருக்குத்தான் பாதிப்பு. இதுவரை சினிமாவில் சம்பாதித்த பணத்தை செலவு செய்து வருகிறார் அதனால் அவருக்குத்தான் பாதிப்பு. மக்களுக்கு இருகின்றவரை செலவு செய்வார் இல்லையென்றால் மீண்டும் நடிக்க வருவார் என்றார்