தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.
கடந்த சில நாட்களாக சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதில் 180 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல்வேறு வருமான வரி சோதனைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் முறையிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
அண்மையில் நடந்த வருமானவரிச் சோதனைகள் தொடர்பான மனுவை ஆளுநரிடம் அளித்தேன். கோரிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.
அரசுப் பணி டெண்டர்கள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டதா..? என்பது பற்றி விசாரிக்க கோரியும், சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழகத்தில் நாங்கள் ஆட்சி செய்த காலத்தில் அமைச்சர்களின் உறவினர்கள் யாருக்கும் அரசுப் பணி டெண்டர்கள் கொடுக்கப்படவில்லை என்றார்.