சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
விழா மேடையில் சூர்யா பேசுகையில், “என்னுடைய அடுத்த கட்ட முயற்சிகளுக்கு எப்போதும் ஞானவேல் ராஜா ஒரு காரணமாக இருந்திருக்கிறார். அவருக்கு நன்றி. பாபி தியோல் ஒரு பெரிய ஸ்டார். அவரை நானே நிறைய தடவை சைட் அடிச்சிருக்கேன். என்னுடைய பிரதர் மாதிரி அவர். அவர் இந்தப் படத்தில் வந்ததால் கங்குவா ஒரு இந்திய படமாக மாறியிருக்கிறது. அவர் மட்டும் இல்லை. இந்தப் படத்தில் நடித்த அத்தனை நடிகர் நடிகைகளும் ஒரு கலைக்காக அடிமையா வேலை செஞ்சிருக்காங்க. காசு, பணம், நேரம் பார்க்காமல் உழைச்சிருக்காங்க. ஒரு சிறந்த படத்தை கொடுக்கவேண்டும். அதற்காக எவ்வளவு உழைக்க முடியுமோ, அதை எல்லாத்தையும் உழைச்சிருக்காங்க.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், புஷ்பா போல பெரிய படங்களை பண்ணிட்டு வருபவர், தமிழில் ஒரு முக்கியமான படத்தை பண்ண வேண்டும் என எந்த கூச்சமும் இல்லாமல் ஃபோன் பன்னி உரிமையுடன் கேட்டார். 27 வருஷங்களுக்கு பிறகு நான் ஒரு சீனியர் போல் உணர்கிறேன். சினிமாவை முன்னோக்கி எடுத்து செல்வது ஒரு பொறுப்பு. கலை என்பது சமூகத்தில் இருக்கும் குரல். அதன் மூலம் நல்ல விஷயங்கள் வர வேண்டும். எழுத்து மூலமாகவும் இலக்கியம் மூலமாகவும் என்னென்ன கலைகள் இருக்கிறதோ அத்தனை மூலமாகவும் நல்ல விஷயங்கள் வர வேண்டும். அதன் வழியேதான் நம்ம சமுதாயம் மேம்படும். சினிமா என்பது வெறும் பொழுது போக்கான விஷயம் இல்லை. அப்படி பார்க்கும் போது மெய்யழகன் ஒரு முக்கியமான சினிமா. அது ஒரு மருந்து மாதிரி. ஒவ்வொருத்தருக்கும் ஒரு சினிமா ரொம்ப ரொம்ப முக்கியம்.
கங்குவா சிவா எடுத்து வந்த பொக்கிஷம். அதில் இதுவரை பார்க்காத விஷூவல்ஸ் இருக்கும். நம்ம தமிழ் சினிமவை முன்னோக்கி எடுத்துக் கொண்டு போறதுக்கு எவ்வளவு நேர்மையான உழைப்பை போட முடியுமோ, அதை அத்தனை பேரும் போட்டிருக்கிறோம். சிவா சொல்லுகிற இரண்டு தத்துவங்களை நாம் கடை பிடிக்க வேண்டும். ஒன்னு, நல்லதே நடக்கும். அதாவது என்ன நடந்தாலும் அது நல்லதுக்காகவே நடக்கும். இன்னொன்னு, உங்க மனசு கஷ்டப்படுத்த யாராவது ட்ரை பண்ணாங்கன்னா, அவங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்காதீங்க.
ஆரம்ப காலத்தில் எதாவது ஒரு விமர்சனத்தை பார்த்தால், ரோலக்ஸ் கதாபாத்திரம் போல் அவங்க தலையை வெட்ட வேண்டும். அந்தளவிற்கு என கோவம் வரும். ஆனால் மன்னிக்கிற மாதிரி அழகான விஷயம் இல்லவே இல்லை. இதை புரிய வைத்தது சிவாதான். அதனால் என்ன வெறுப்பை யார் விதைத்தாலும் நம்ம அன்பை மட்டுமே பரிமாறுவோம். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
படப்பிடிப்பில் இருந்ததால் அதை தவிர்த்து நாங்க பண்ண வேண்டிய வேலைகளை வீட்டில் இருக்கும் பெண்கள் பண்ணினார்கள். அவங்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். உங்களுடைய சக்தி, தியாகம், மன வலிமை, ஆசீர்வாதம் எதுவும் இல்லாமல் இந்தத் தேரை(கங்குவா) இழுத்திருக்க முடியாது. என்னுடைய 27 வருஷத்தில் நிறைய ஏற்ற இறக்கங்கள் பார்த்திருக்கிறேன். சூரியன் மேலையே இருந்தால் நம்ம புது விடியல் பார்க்க முடியாது. அதனால் என்னுடைய வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வருவதை நான் மகிழ்ச்சியாகவே பார்க்கிறேன். ரசிகர்களின் அன்பு விலை மதிக்க முடியாதது. அவங்களின் அன்புக்கு சேர்ந்த மாதிரி கங்குவா இருக்கும்.
நான் படிச்ச காலேஜ்ல உதயநிதி ஜூனியரா இருந்தார். அவரை பாஸு-ன்னு தான் கூப்பிடுவேன். என்னைய வைச்சி இரண்டு படம் எடுத்திருக்கிறார். அவர் இப்போது துணை முதலமைச்சராக மாறியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அதே போல் இன்னொரு நண்பர் புதிய பாதை போட்டு புதிய பயணத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறார். அவருடைய வரவும் நல்-வரவாக இருக்கட்டும். அஜித் சார் ஒரு எனர்ஜி கொடுத்தார். அதை கொடுக்காமல் இருந்திருந்தால் இந்தப் படத்தை நாங்கள் உருவாக்கியிருக்க முடியாது. அதே போலத்தான் நாகர்ஜூனாவையும் பார்க்கிறேன். வாலி சார் சொன்ன வசனம். தோளில் தட்டி கொடுத்தால் போதும் ஊக்குவிப்பவனும் தேக்கு விப்பான். அந்த மாதிரி எங்களை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி. நவம்பர் 14 அன்னைக்கு நெருப்பு மாதிரி ஒரு படம் வந்துக் கொண்டு இருக்கிறது” என்றார்.