Skip to main content

"டைரக்டர் சார்... நான் ரஜினி பேசுறேன்!" - நந்தன் இயக்குநருக்கு வந்த அழைப்பு

Published on 27/10/2024 | Edited on 27/10/2024
nanthan

சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான படம் நந்தன். இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பட்டியலின மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை பேசியிருக்கின்றனர்.

இப்படத்திற்கு நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி, பா.ம.க. தலைவர் அன்புமணி, சிவகார்த்திகேயன், இயக்குநர் கோபி நயினார் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். சமீபத்தில் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியான நிலையில் பலரது கவனத்தை ஈர்த்தது.இப்படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளதாக சசிகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய ரஜினிகாந்துக்கு நெஞ்சார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

nn

இந்நிலையில் படத்தின் இயக்குநரான இரா.சரவணன், நடிகர் ரஜினிகாந்த் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திரைப்படத்தை பாராட்டியது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'அறிமுகம் இல்லா எண்ணிலிருந்து அழைப்பு… “சரவணன் சாருங்களா…? ரஜினி சார் ‘நந்தன்’ படம் பார்த்தார். இப்போ உங்ககிட்ட பேசுவார்” என்றார்கள். ரோட்டில் நின்ற நான் என் அலுவலக அறைக்குள் ஓடிவந்து கதவைச் சார்த்திக் கொண்டேன். போன் வந்தது. பூவைத் தொடுவதுபோல் போனை தொட்டேன். “டைரக்டர் சார்… நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்க ‘நந்தன்’ படம் பார்த்தேன்… கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய்க் காட்ட நான் தயார்னு சொல்லி இருக்கீங்க… என்ன கட்ஸ் சார்…” எனப் பேசத் தொடங்கியவர், படபட வேகத்தில் படத்தின் மொத்த விஷயங்களையும் பாராட்டித் தள்ளினார்.

nn

சசிகுமார் சார் தொடங்கி மாற்றுத் திறனாளியாக வந்த சமுத்திரக்கனி சார் வரை குறிப்பிட்டுப் பாராட்டினார். கோப்புலிங்கம் பாத்திரத்தில் நடித்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாரை சிலாகித்தார். மின்னலைப் படம் பிடிக்க முடியாதது போல், பட்படார் பட்டாசாகத் தெறித்துவிழுந்த அவர் வார்த்தைகளை என்னால் சரிவர நினைவுகூரக்கூட முடியவில்லை. ஒரு பனித்துளியைச் சுண்டி வீசுவதுபோல் மொத்த பாரங்களையும் வாழ்த்து வார்த்தைகளால் துடைத்தெறிந்தார் சூப்பர் ஸ்டார். ‘நந்தன்’ என்னும் எளியவன் தலைக்குக் கிரீடமாகி இருக்கிறது ரஜினி சாரின் வாழ்த்து…' என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்