Skip to main content

'பட்டாசு வெடிப்பதில் தகராறு; சிறுவன் அடித்துக்கொலையா?'-போலீசார் விசாரணை

Published on 01/11/2024 | Edited on 01/11/2024
nnn

பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் ஒருவன் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சென்னை ராயப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 சென்னை ராயப்பேட்டை அம்பேத்கர் பகுதியில் வசித்து வருபவர் ஷாம் (17 வயது). நேற்று தீபாவளி என்பதால் வீட்டுக்கு வந்த சக நண்பர்கள் பட்டாசு வெடிக்கலாம் என நேற்று இரவு ஐஸ் ஹவுஸில் உள்ள செல்லம்மாள் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பட்டாசு வெடிப்பதில் ஷாமிற்கும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் தாக்கப்பட்டதில் தடுமாறி ஷாம் கீழே விழுந்ததாக தகவல் வெளியானது.

ஷாம் மயக்கமடைந்த நிலையில் இருக்கிறார் என நினைத்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த போது ஷாம் உயிரிழந்தது தெரியவந்தது. தீபாவளி தினத்தன்றே தன்னுடைய மகன் இறந்த சோகம் தாங்க முடியாமல் கதறி அழுத சிறுவனின் தாய் லட்சுமி, சிறுவர்கள் தாக்கி அடித்து தன் மகனை கொலை செய்து விட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

முதலை கார்த்திக் என்ற நபர் ஷாமை அடித்துக் கொன்றதாக உறவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பட்டாசு வெடிக்கும் போது பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படும் அந்த இடத்தில் இருந்த நபர் ஒருவர் தனக்கு போன் செய்ததாகவும், ''பசங்க எல்லாம் சேர்ந்து அடித்து சாகடித்தார்கள். முதலை கார்த்திக் என்ற பையன் தான் அடித்து கொன்றான்' என தங்களுக்கு தகவல் வந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

முதலை கார்த்தி என்ற நபர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவான முதலை கார்த்திகை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்