நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நேற்று (27-10-24) நடைபெற்றது. அப்போது பேசிய த.வெ.க தலைவர் விஜய், “பிறப்பை வைத்து ஏற்றத்தாழ்வு இல்லை. அது கூடவே கூடாது. சமாதான சமத்துவ கொள்கையைக் கையில் எடுத்த போது இங்க கொஞ்சம் கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இந்த மாநாட்டில் வெளிப்படையாக அறிவித்ததற்கு அப்புறம் கதறல் இன்னும் சத்தமாகக் கேட்கும் என்று நினைக்கிறேன். அதனையும் பார்ப்போம். நம்முடைய இயல்பான அடிப்படையான கோட்பாட்டிற்கு எதிராக இருக்கிற மாதிரி மக்களை மதம், சாதி, இனம், மொழி பாலினம், ஏழை, பணக்காரன் என்று சூழ்ச்சி செய்து பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டும் தான் எதிரியா. அப்படி என்றால் நமக்கு ஒரே ஒரு எதிரி தானா இல்லையே.
நமக்கு இன்னொரு கோட்பாடு இருக்கிறது. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பது தானே அது. ஊழல் எல்லாரும் வாழ்க்கையில் பழகிப் போய் அது ஒரு வைரஸ் மாதிரி உள்ளது. அதனை 100% ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. வேற வழி இல்லை அதனை ஒழிக்க வேண்டும். ஆனா அது வேற கதை. இனவாத சக்திகளைக் கூட நாம் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். மதம் பிடித்த யானை மாதிரி இந்த ஊழல் இருக்கிறது. இந்த ஊழல் எங்கே ஒளிந்து இருக்கு எப்படி ஒளிந்து இருக்கு. எந்த வடிவத்தில் ஒளிந்து இருக்கு என்று கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசிக் கொள்கையை நாடகம் போடும், கலாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும். ஊழலுக்கு முகம் இருக்காது. முகமூடி தான் இருக்கும். முகமூடி தான் இருக்குமே தவிர முகமே இருக்காது. முகமூடி போட்ட கரப்ஷன் கபடத்தார்கள் இப்போது கூட நம்மோடு இருந்து கொண்டு இப்போது இங்கு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய ஒரு எதிரி இனவாத சக்திகள். நம்முடைய இன்னொரு எதிரி ஊழல் கபடத்தாரர்கள். மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். இங்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது. இது மதச்சார்பின்மையைப் பேசுகிற தமிழ்நாட்டு மண். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் பிறந்த மண். சாதி இருக்கும். அது சைலண்டாக மட்டும் தான் இருக்கும். சாதி சமூக நீதிக்கான அளவுகோலாக மட்டுமே இருக்கும். அதனை வைத்து வேற மாதிரி முயற்சி செய்தாலும் அதனை நம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த மண்ணில் அது அரசியல் தியரி நிரூபிக்கப்பட்டது” எனப் பேசினார்.
இந்த நிலையில், விஜய் கூறிய கருத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “விஜய் பேசியதை நான் கேட்கவில்லை. அவர் பேசியதை கேட்டுவிட்டு, பதில் அளிக்கிறேன். விஜய்யின் முழுப் பேச்சை பார்த்த பிறகு தான் பேசமுடியும்” என்று கூறினார்.