
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மே- 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு மீண்டும் திறந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாகத் தமிழகம் முழுவதும் 15 கொலைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. மதுக்கடை திறப்பிற்குத் தமிழகம் முழுவதும் பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் டாஸ்மாக் இயங்க தடை கேட்டு 'மக்கள் நீதி மய்யம்' கட்சி சார்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இயங்க தடை விதித்தும், உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிட்டது. இது தமிழக பெண்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி, ஒருங்கிணைப்பு சார்பாக திருச்சி உள்ள மதுக்கடைக்கு முன்பாகப் பொதுமக்களுக்கு இன்று (09.05.2020) இனிப்பு வழங்கி தீர்ப்பைக் கொண்டாடினர்கள். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட நற்பணியிக்க செயலாளர் K.J.S.குமார், வின்னர் மாணிக்கம், சிந்தாமணி கனகராஜ், பூபதி, நடராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.