விழுப்புரம் நகரத்தை ஒட்டி உள்ளது ஜானகிபுரம். இங்குள்ள 2 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. டாஸ்மாக் குடோனில் இருந்து கணக்குக் காட்டாமல் கூடுதலாக மதுபாட்டில்களை வரவழைத்து அதைத் தனியார் குடோனில் பதுக்கி வைத்துள்ளனர் என்ற தகவல் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் விழுப்புரம் ஜானகிபுரம் டாஸ்மாக் கடையில் நேற்று மாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு இருந்த குடோனில் இருந்து கடைக்கு அனுப்பப்பட்ட மது பாட்டில்கள், மது விற்பனை குறித்தும் ஆய்வு செய்தனர். சோதனையின் போது மூன்று நாட்களில் வசூல் ஆன தொகையில் கணக்கில் வராத 31 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 லட்சத்து 47 ஆயிரத்து 180 ரூபாய் மதிப்பிலான 7000 மதுபாட்டில்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தெற்கு இருப்பு பகுதியில் மூன்று டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளிலும் கணக்கு வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சரி பார்த்தனர். அப்போது விற்பனையாளர்கள் ரமேஷ், .மதியழகன், செந்தில்குமார், ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அந்த நேரத்தில் ரெய்டு நடைபெற்ற கடைகளில் ஆய்வு செய்ய கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் ரவிக்குமார் காரில் வந்துள்ளார். அவரது காரை போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மது குடிப்போர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.