ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு தற்போது வரை தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது பேசுபொருளாகியிருக்கும் நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து திமுக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் என்ற பதவியே தேவையில்லை என்பது தொடர்பான கருத்துக்களையும் திமுகவினர் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் ஆளுநர் பதவி முக்கியம் வாய்ந்தது என்றும், அதுவும் அரசியலமைப்பில் ஒரு அங்கம் என்றும் பல்வேறு பேட்டிகளில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளிப்படுத்தி வருகிறார்.
சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ஆளுநர் விஷயத்தில் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். முழுமையாக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறுவது சரியல்ல. ஆளுநருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கத்தான் வேண்டும்” எனத் தெரிவித்தார்.