சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வாடகை கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரது வங்கிக் கணக்கில் கடந்த 9 ஆம் தேதி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியிலிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் ஆகியிருப்பதாகக் குறுஞ்செய்தி ஒன்று ராஜ்குமாரின் கைப்பேசிக்கு வந்துள்ளது.
அதே சமயம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 105 மட்டுமே இருந்த நிலையில், ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் குறுஞ்செய்தி ஒரு ஏமாற்று வேலை என்று கருதியிருக்கிறார். பின்னர் சந்தேகமடைந்த ராஜ்குமார் இருக்கும் பணத்தை நண்பருக்குப் பகிர்ந்து பார்த்தால் உண்மை தெரியவரும் என்று தனது நண்பருக்கு ரூ. 21 ஆயிரத்தைப் பகிர்ந்துள்ளார். அப்போதுதான் தனது வங்கிக் கணக்கிற்கு ரூ. 9 ஆயிரம் கோடி பணம் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்குமாரைத் தொடர்புகொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நிர்வாகம் தவறுதலாக உங்களுக்குப் பணம் டெபாசிட் ஆகியுள்ளது. அதனால் பணத்தை யாருக்கும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு பின் பணம் திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து, வங்கியிலிருந்து தவறுதலாகப் பணம் அனுப்பப்பட்டதால், நீங்கள் நண்பருக்குப் பகிர்ந்த ரூ. 21 ஆயிரம் பணத்தைத் திருப்பி தர வேண்டாம் என ராஜ்குமாருக்கு வங்கி நிர்வாகம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இது குறித்து சைபர் கிரைம் பிரிவில் ராஜ்குமார் தனது வங்கிக் கணக்கில் ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து சமீபத்தில் சம்பந்தப்பட்ட வங்கியின் மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தனது வங்கிக் கணக்கில் ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், “ரிசர்வ் வங்கி அனுமதியின்றி மிகப்பெரிய அளவிலான தொகையை வங்கி நிர்வாகம் சார்பில் அனுப்பியது எப்படி என விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.