'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்தச் சூழலில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி (23.09.2023) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றியும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்தும் இந்த குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14.02.2024) தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி சட்ட்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார். அந்த தீர்மானத்தில், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அதிகார பரவலுக்கு எதிரானது என்பதால் நடைமுறைப்படுத்தக் கூடாது. மக்காளாட்சி தத்துவத்திற்கு எதிரானது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, நடைமுறைக்கு சாத்தியமற்ற திட்டம் என்பதை கருத்தில் கொண்டு கைவிட வேண்டும். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு தேர்தல் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.