அம்பாசமுத்திரத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக முதலில் சார் ஆட்சியர் விசாரணை, பிறகு ஆட்சியர் விசாரணை என நடந்தது. பின் அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
அதேபோல், சுபாஷ் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய தண்டனைச் சட்டம் 326-ல் பல்வீர் சிங் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு பிறகு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் அந்த வழக்குகளை அப்படியே பதிவு செய்து அவர்களின் விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஜமீன்சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா அளித்த புகாரின் அடிப்படையில் பல்வீர் சிங் மீதும் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருடன் சேர்த்து ஆய்வாளர் ராஜகுமாரி, காவல் உதவி ஆய்வாளர் ஜோசப் உள்ளிட்ட 4 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல் பிடுங்கிய விவகாரத்தில் இதுவரை பல்வீர் சிங் மீது மூன்று வழக்குகள் பதியப்பட்டிருந்த நிலையில் தற்போது நான்காவது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.