தங்களது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் நமது குடிமக்கள் விழிப்போடு தான் இருக்கிறார்கள். கரோனா வைரல் பரவலை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசு நிர்வாகமும் இதை அறிவித்துள்ளது.
ஈரோடு நகரில் காய்கறி மார்க்கெட்டாக நேதாஜி தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு ஈரோடு மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், ஓசூர், கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் தினசரி காய்கறிகளை கொள்முதல் செய்வதும் அதை விற்பனை செய்வதும் வழக்கம். இந்த மார்க்கெட்டில் மாவட்த்தில் உள்ள கிராமப்புறங்களில் மளிகை கடை நடத்தும் வியாபாரிகள் மொத்த விலையிலும், நகர மக்கள் சில்லரை விலையிலும் காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்தநிலையில், 22ம் தேதி ஞாயிற்றுகிழமை மத்திய, மாநில அரசுகளின் சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உள்ளது. இதனால், நேதாஜி தினசரி சந்தையில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளனர். இதனால், சனிக்கிழமை அதிகாலை முதலே மாலை வரை காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதே போல் தான் டாஸ்மாக் கடைக்கும் ஞாயிறு விடுமுறை என அரசு அறிவித்துள்ளதால் இன்று பகல் முதல் டாஸ்மாக் மது கடைகளுக்கு வழக்கத்தை விட குடிமகன்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுகிழமைக்கும் சேர்த்து மதுபானங்களை கூடுதலாக குடிமகன்கள் வாங்கி சென்றனர்.
அதில் ஒரு குடிமகன், அது தான் பிரதமர் மோடியே சொல்லிட்டாரு எல்லோரும் வீட்டிலேயே இருங்கனும், அப்புறம் என்ன வீட்டிலே எப்படி தனியா இருக்க முடியும் சரக்க போட்டுட்டா நேரம் போறது தெரியாது, அதுக்குதான் ஒன்னுக்கு ரெண்டு பாட்டில்" என்றார் ஜாலியாக. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் குடிமகன்கள் உஷாராகத்தான் இருக்காங்க சார் என்றார் டாஸ்மாக் பணியாளர் ஒருவர்.