கும்பகோணம் சிஐடியுவை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் குவாரி அமைத்து தரக்கோரி கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"தஞ்சை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 16.8.2019 அன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், செயற்பொறியாளர், சிஐடியு தலைவர்களுடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் உறுதியளித்தபடி மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு தேவனோடை குவாரியில் மணல் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியை உடனே அமல்படுத்த வேண்டும். வேலை இழந்து வருமானமின்றி வாழ்விழந்த வறுமையோடு போராடும் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கொள்ளிடம் ஆற்றில் தனி மணல் குவாரி அமைத்திட வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். லாரிகள் மூலம் மணல் எடுப்பதை அனுமதிக்க கூடாது" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்தில் இருந்தவர்களையும் சிஐடியு தலைவர்களையும் கும்பகோணம் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையே பேச்சுவார்த்தையிலும் கூறினர், அதற்கு பொதுப்பணித் துறையின் சார்பில் தேவனோடை பகுதியில் மாட்டுவண்டிகள் தொழிலாளர்கள் மணல் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.கொத்தங்குடி பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க கனிமவளத்துறை க்கு ஆய்வு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது விரைவில் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், தொழிற்சங்கத்தின் சார்பில் ஏற்கனவே அளிக்கப்பட்ட மாட்டுவண்டி பட்டியலில் உண்மை தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருவிடைமருதூர் வட்டம் முள்ளங்குடி கிராமத்தில் மாட்டு வண்டி குவாரி திறக்க உரிய ஆய்வு அறிக்கை கனிம வளத் துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டுவண்டி அனைத்திற்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அதன் விபரப்படி மணல் எடுக்க டோக்கன் வழங்கப்படும் என அரசு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத்தை கைவிட்டுள்ளனர்.