Skip to main content

விவசாய நிலத்தில் 10 அடி நீளம் மலைப்பாம்பு;  பத்திரமாக மீட்டு காட்டுக்குள் விட்ட வனத்துறை

Published on 27/09/2024 | Edited on 27/09/2024
10 feet long python in farmland
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம்,  ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி  கிராமத்தில்  விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டு அறுவடை செய்து வருகின்றனர். அப்பகுதியே சேர்ந்த விவசாயி ஒருவர் காலை வழக்கம் போல் வேர்க்கடலை அறுவடை செய்ய சென்றபோது திடீரென அங்கு சத்தம் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சடைந்து, ‘பாம்பு.. பாம்பு..’ என கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனைச் சாலையில் சென்றவர்கள் கேட்டு ஓடி வந்து பார்த்தனர்.

மலைப் பாம்பு இருப்பது அப்பகுதி மக்களுக்கு காட்டு தீ போல் பரவியதால்  சாலையில் செல்லும் அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு மலைப்பாம்பை  பார்த்துச் சென்றனர். மேலும் பயணிகளை அழைத்துச் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் சாலையில் பேருந்து நிறுத்திவிட்டு மலைப்பாம்பை பார்த்துவிட்டு பிறகு வாகனத்தை எடுத்துச் சென்றார்.  இதனையடுத்து தகவல் அறிந்து வந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் நிலத்தில் இருந்த மலைப்பாம்பை  மீட்டு அருகே உள்ள பள்ளிக்கொண்டா காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

மலைப்பாம்பு இருப்பதைப் பார்க்க வந்த பொதுமக்கள் திருவிழா கூட்டம்போல் கூடியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்