
தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் தேனி லட்சுமி புரத்தில் இன்று மாலை நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.
அதற்காக நேற்று இரவு 9.30 மணிக்கு தேனி வந்த முதல்வர் ஸ்டாலினை தொகுதி பொறுப்பாளரும் அமைச்சருமான ஐ.பெரியசாமி வரவேற்றார். அதைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட செயலாளரும் வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் முதல்வருக்கு சால்வை, மாலை அணிவித்து வரவேற்றனர்.

அதைத் தொடர்நந்து கம்பம் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் முதல்வர் ஸ்டாலின் தங்கினார். அதன் பின் தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அழைத்து தொகுதி நிலவரம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். பின்னர் நமது வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும், அதற்காக நீங்கள் இரவு பகல் பாராமல் பணியாற்ற வேண்டும், என்று முதல்வர் அதிரடி உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார்.
இதையடுத்து, இன்று காலை 7 மணிக்கு பெரியகுளம் ரோட்டில் உள்ள உழவர் சந்தைக்கு வாக்கிங் வந்தார். மெயின் ரோட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள சந்தைக்கு நடந்து சென்றார். அவருடன் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் ராமகிருஷ்ணன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது செல்லும் வழியில் வியாபாரிகள், பொதுமக்களிடம் நலம் விசாரித்து செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது அவர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். பிறகு சந்தைக்குள் சென்று சுற்றி பார்த்து விட்டு, தேனி ஃபாரஸ்ட் ரோட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் முதல்வர் டீ குடித்தார். அமைச்சர் ஐ.பெரியசாமி, வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோருடன் அமர்ந்து டீ குடித்தார்.

இதையடுத்து தனியார் ஹோட்டலுக்கு ஓய்வெடுக்க சென்று விட்டு, மாலை லட்சுமிபுரத்தில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேனி பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருக்கிறார்.
இதற்கான முன்னேற்பாடுகளைத் தொகுதி பொறுப்பாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.