தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜன் பிறந்த நாளின் சதய நட்சத்திரத்தை குறிக்கும் விதமாக சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை, உலக கட்டிடக் கலைக்கே முன்னோடியாக இருந்த பெரிய கோயிலைகட்டிய மாமன்னன் ராஜராஜன் சிலையை கோயிலுக்குள் வைக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வந்தாலும் அதைப் பற்றி பொருட்படுத்தாத அரசாங்கம், மற்றும் கோயில் நிர்வாகம் கோரிக்கைகளை நிராகரித்தே வந்தது. அதனால் கோயிலுக்கு வெளியே சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்து செல்வதை வழக்கமாகவே கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் சிலையுடன் பல சிலைகள் காணாமல் போனதால் அந்த கோயிலுக்கு வரும் பல அரசியல் பிரபலங்களும் ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்பட்டனர் என்று அரசியல் தலைவர்கள் வருவதை தவிர்த்துவந்தனர். ஆனால் அதே கோயிலுக்குள் 1000 வது விழாவை அரசு விழாவாக நடத்தினார் அப்போதைய முதல்வர் கலைஞர்.
தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினரிடம்.. ராஜராஜசோழன் சிலை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது அந்த கோரிக்கையை புகார் மனுவாக பெற்று வழக்கு பதிவு செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கும்படி தஞ்சை எஸ்.பி. செந்தில்குமாரிடம் கேட்டுக் கொண்ட ஐ.ஜி. புகார் பதிவானதும் அந்த புகாரை வைத்துக் கொண்டே குஜராத் சென்று ராஜராஜன் மற்றும் பல சிலைகளை மீட்டு வந்து சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது மீட்கப்பட்ட சிலைகளை காப்பகத்தில் வைக்க அதிகாரிகள் கேட்டனர். ஆனால் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மற்றும் எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் பல வருடங்களுக்கு பிறகு மீட்கப்பட்டதால் அந்த சிலைகளை கோயிலில் இருந்த இடத்திலேயே வைக்க வேண்டும். அந்த சிலைகளுக்கு வேண்டிய பாதுகாப்பை காவல் துறை வழங்க தயாராக உள்ளது என்று உறுதிமொழி கொடுத்து சிலைகளை தஞ்சை கோயிலுக்கு கொண்டு வந்து வைத்ததுடன் தொடர் பாதுகாப்பும் அளித்து வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட சுற்றலா பயணிகள் மட்டுமின்றி வரலாற்று ஆய்வாளர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. தஞ்சை பகுதி மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ராஜராஜன் சிலை கோயிலுக்குள் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடிவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் தான் எதிர்வரும் 19 – 20 தேதிகளில் சதயவிழா நடக்க உள்ளது. அதற்கான பந்தல்கால் நடும் விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இரண்டாம் நாள் காலையில் ஓதுவார்கள் திருமறை வீதிஉலா நடக்கும் அப்போது ஓதுவார்கள் கோயில் வடிவ ரதத்தில் செல்வார்கள். அந்த ரதம் சிதிலமடைந்துவிட்டது.
இதை அறிந்த தஞ்சை வல்லம் பகுதியை சேர்ந்த சினிமா செட் கலைஞர் ராமலிங்கம் ரூ. 10 லட்சம் மதிப்பில் பைபரால் பெரிய கோயில் வடிவ ரதத்தை உருவாக்கி கோயிலுக்கு வழங்கினார். இந்த ரதம் 18 அடி நீளம், 12 அடி அகலம் கொண்டதாக உள்ளது. இந்த ராமலிங்கம் தான் 2010 பெரியகோயிலின் 1000 வது விழா கருத்தரங்க மேடையை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சதயவிழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.