மழையில் அம்மன் கோயில் இடிந்து விழுந்ததும் முதல் ஆளாக சென்று பார்த்ததோடு, அங்கிருந்தபடியே இந்து சமய அறநிலையதுறை அமைச்சரை தொடர்பு கொண்டு புனரமைப்பு செய்ய கோரிய தமிமுன் அன்சாரிக்கு பாராட்டுக்கள் குவியத் துவங்கியுள்ளன.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் ஆறுகளும், வாய்க்கால்களும் உடைந்து வெள்ள நீர் புகுந்தது பொதுமக்களை பாழ்படுத்துகிறது. வீடுகளும், கட்டிடங்களும் ஆங்காங்கே இடிந்து விழுந்து சேதத்தை உண்டாக்கியிருக்கிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தின் கடலோரப் பகுதியான வேதாரண்யத்தை அடுத்துள்ள தோப்புத்துறையில் பிரசித்திப் பெற்ற அம்மன்கோயில் உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மன் கோயில் இடிந்து விழுந்தது. இதை கேள்விப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தமிமுன் அன்சாரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்பு அந்த கிராமத்தின் இளைஞர் நற்பணி மன்றத்தினரை அழைத்து கோயிலின் பாரம்பரியம் குறித்து தனக்கு தெரிந்ததை விளக்கியதோடு, அவர்களிடமும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு. தோப்புத்துறை எனது சொந்த ஊர், அதோடு இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டரை நகமும் சதையுமாக கலந்து வாழக்கூடிய ஊர். எங்கள் ஊரில் உள்ள இந்து முஸ்லீம் ஒற்றுமையை கண்டு பல அரசியல் வல்லுனர்களும், சமய வழிபாட்டாளர்களும் பாராட்டியிருக்கின்றனர். இங்குள்ள பிரசித்திப் பெற்ற அம்மன் கோயில் மழையில் இடிந்து விழுந்து விட்டது. அதனை உடனே சரி செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதைக் கேட்டதும் நெகிழ்ந்து போன அமைச்சர், மழை விட்டதும் உடனே அதிகாரிகளை அனுப்பி புனரமைப்பு வேலைகளை செய்வதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். எம்.எல்.ஏ.வின் செயலை கண்டு அங்கு கூடியிருந்த இந்து சமுதாய மக்களும், பா.ஜ.க.வை சேர்ந்த சிலரும் மனம் உருகி வாழ்த்துக் கூறினர்.
"தான் அனைத்து சமூகத்துக்குமானவன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் தமிமுன் அன்சாரி" இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் வரை எத்தனை பிரிவினைவாதிகள் வந்தாலும் தமிழகத்தை யாராலும் ஒன்றும் செய்துவிடமுடியாது " என்கிறார் வேதாரண்யத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.