திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இளைஞர் பெருமன்றம் மற்றும் திருப்பூர் மஞ்சிகை பதிப்பகம், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள தமிழ்த்துறை இணைந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு 51 தமிழகக் கவிஞர்களின் நூல்கள் மற்றும் 400 தமிழகக் கவிஞர்களின் நவீன நாலடியார் (சங்க இலக்கியம்) தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்குப் பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் பி. மகேந்திரன், கவிஞர் யவனிகா ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய இளைஞர் விருதாளர் நிறுவனத்தைச் சேர்ந்த மாரிமுத்து வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்புரை ஆற்றிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமார், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. தமிழ் மொழி உலகிலேயே முதலில் தோன்றிய தொன்மையான மொழியாகும். கீழடி ஆய்வுகள் நம் தமிழனத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.
திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் வாரிக் கொடுக்கும் வள்ளல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் நூல்கள் மற்றும் கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டது திண்டுக்கல் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. உலகின் பொது நூலாகத் திருக்குறள் உள்ளது. நாலடியார் நூல்கள் சமூக நீதியை எடுத்துரைக்கும் நூலாக உள்ளது.
இவ்வருடம் முழுவதும் கொண்டாடப்படும் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள் கௌரவப்படுத்த உள்ளார்கள் என்றதோடு மாற்றுத்திறனாளியாக இருந்தும் மஞ்சிகை பதிப்பகத்தைச் சிறப்பாக நடத்தி இன்று தன்னைப் போன்ற கவிஞர்களைக் கௌரவப்படுத்தும் நோக்கில் சக்தி கலைக் கல்லூரியில் விழா நடத்திய கவிஞர் ஆபா அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்” என்றதோடு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் 51 கவிஞர்கள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்களுக்குப் பாராட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.