![dmk kn Nehru speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/amKBpuVArocRB4M2VyFa0qgDaVv1GVDwGxWJu2xysoU/1600603576/sites/default/files/inline-images/ZAcadfasda.jpg)
தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என. நேரு கலந்து கொண்டார். இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் நகரம், ஒன்றியம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசும்போது, வருகின்ற 2021 ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும். திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் 25 ஆண்டுகளுக்கு திமுகவை அசைக்க முடியாது. இதற்காக கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அதிமுக பணம் பலம் வைத்து, வரும் தேர்தலில் மக்களை விலைக்கு வாங்க நினைத்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக இருக்கும்வரை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. நாங்கள் எம்.எல்.ஏ ஆவதற்கும், மந்திரி ஆவதற்கும் ஆசைப் படவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்காகத்தான் பாடுபட்டு கொண்டிருக்கிறோம் என்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், மூக்கையா மற்றும் கம்பம் செல்வேந்திரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், ஆண்டிப் பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உள்பட முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.