தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ளாததை அடுத்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய பள்ளிக் குழுமம் சார்பில் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும். அதே போல், இந்த ஆண்டும் டெல்லியில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி துவங்கியுள்ள தேசிய விளையாட்டுப் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்வர். ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இது சர்ச்சையான நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து அது குறித்துப் பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, “கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை. அந்த நேரத்தில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்று இருந்தார்கள். அதனால் இந்த ஆண்டில் நடைபெறவிருந்த விளையாட்டு போட்டிகளில் அரசு அதிகாரிகளின் தகவல் பரிமாற்றத்தின் ஏற்பட்ட குழப்பத்தினால் தான் தமிழக மாணவர்கள் கலந்துகொள்ள இயலாமல் போனது. இதற்கு தமிழக அரசு, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்" என்று தெரிவித்தார்.
இது பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "பள்ளி மாணவர்கள் மே மாதத்தில் தங்களது தேர்வுகளை முடித்துவிட்டு அவரவர் ஊருக்கு சென்றதால் இந்த போட்டியை ஏற்பாடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நம்முடைய கவனத்திற்கு சுற்றறிக்கை வந்ததும் அதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது தான் கடமை. ஆனால் அதில் தவறு நடந்துள்ளது. அதனால் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.