கரோனா பாதிப்பிலிருந்து மீள தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்த மருந்து என்பதை உணர்ந்த சீனா, தனது நாட்டு மக்களைத் தனிமைப்படுத்தி கரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்டு வந்துள்ளது.
அமெரிக்கா போன்ற பல உலக நாடுகள் உணராததால் வைரஸ் பரவலும், பலியும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் தான் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது இந்திய அரசு.
இந்த ஊரடங்கால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். அன்றாடம் கூலி வேலை செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தி வந்த மக்களின் நிலை தான் மோசமாகிக் கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக் கடைகள் திறந்திருந்தாலும் பொருள் வாங்க பணம் இல்லாமல் தவிக்கிறார்கள் கூலித் தொழிலாளர்கள். இதை உணர்ந்த பலரும் தங்களால் இயன்ற உணவுகளை வழங்கி உதவி வருகிறார்கள்.
இந்தநிலையில, புதுக்கோட்டையில் முன்னாள் விஜய்மன்ற மாவட்டத் தலைவர் ஸ்டாலின் மாஸ்கோ சாலை ஓரங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு கொடுத்து வந்தவர் பிறகு அந்த மக்களுக்கான அவசரத் தேவை என்ன என்பதை அவர்களிடமே கேட்டறிந்து அந்த உதவிகளைச் செய்து வருகிறார். 108 ஊழியர்களுக்கு மரியாதை, துப்புறவுப் பணியாளர்களுக்கு மரியாதை என தொடர்ந்து செய்து வருகிறார்.
ஸ்டாலின் மாஸ்கோ நம்மிடம் கூறியதாவது: "சில நாட்கள் முன்னால் சாலையோரத்தில் குடிசையில் தங்கியிருந்தவர்களை "நீங்கள் எத்தனை பேர் இருக்கீங்க உங்களுக்குச் சாப்பாடு பொட்டலம் குடுக்குறேனு சொல்லி கேட்டேன், அவர்களோ யார் யாரோ வராங்க உணவு பொட்டலத்தை ஒரே நேரத்துல குடுக்குறாங்க. நாங்க சாப்பிட முடியாததை மறு நாள் வச்சு, கெட்டு போனாலும் அதைச் சாப்பிடுறோம், சில நாள் யாருமே வருவதில்லை அன்று முழுவதும் பட்டினியாவே கிடப்போம், எங்களுக்கு உணவு பொட்டலம் எல்லாம் வேண்டாம். காய்கறி, அரிசி, பருப்பு இருந்தா குடுங்க நாங்க பசிக்கிற நேரத்துல பொங்கி சாப்பிட்டுகிறோம்னு சொன்னாங்க". நானும் ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகள் அரிசி, பருப்பு, கொசுவர்த்திகளை மொத்தமாக கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
அதே போல, மற்றொரு இடத்தில் அண்ணா "அரிசி, பருப்பு இப்போதைக்கு இருக்கு, குழந்தைகளுக்கும், எங்களுக்கும் குளிச்சுட்டு மாத்திக்க வேற மாத்து துணி இல்லை வாங்குறதுக்கும் வழி இல்லை" என்றார் ஒரு பெண். தளபதியின் வசனப்படி இல்லாதவர்களுக்கு செய்வதை விட இயலாதவர்களுக்கு செய் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் 'தளபதி' சார்பாகவும், 'SAC' சார்பாகவும் 101 பேருக்கு வேட்டி, சேலை, குழந்தைகளுக்குத் தேவையான ஆடை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் என்னால் முடிந்த சிறு தொகை தலா 200 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இன்னும் என்னால் என்ன முடியுமோ அதை எல்லாம் கஷ்டப்படும் மக்களுக்குச் செய்யக் காத்திருக்கிறேன்" என்றார்.