திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச்சேர்ந்த சுதாகர் , காக்களூர் தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று 9.1.2019 அன்று வேலை முடிந்து திருத்தணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பாண்டூர் அருகே சாலையில் எதிரே வந்த கார் வேகமாக மோதியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பைக்கும், ஒரு ஆணின்(சுதாகர்) காலும் கேட்பாரற்று கிடந்தது. விசாரணையில், திருத்தணி அடுத்த அத்திப்பட்டு சுதாகர் என்பது தெரியவந்தது.
இதன் பின்னர் நேற்று சென்னையில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு சென்ற லாரியில் கால் இல்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து உடனே கடப்பா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், விசாரணையில் திருத்தணி அருகே பாண்டூரில் விபத்தில் சிக்கிய சுதாகரின் உடல் என்பது தெரியவந்தது.
சுதாகரின் சடலம், விபத்துக்குப்பின் அந்த லாரியில் ஏற்றப்பட்டு விபத்தை மறைக்கப்பார்த்தார்களா?அல்லது படுகொலை செய்யப்பட்டு விபத்து போல் சித்தரிக்கப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளதாக சுதாகரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் அதன் உரிமையாளர், காரை ஓட்டி வந்தவர் பற்றி எந்த விவரமும் போலீசார் தெரிவிக்கவில்லை. அந்த கார் முக்கிய பிரமுகரின் காராக இருந்து, அதை போலீசார் மறைக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.