காரில் கஞ்சாவை விற்பனை செய்தவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். கோவை, ஈரோடு, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கஞ்சா விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், சாய்பாபா காலனி மார்க்கெட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சொகுசு காரை நெருங்கி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காரில் இருந்த இருவர் முன்னுக்கு பின் முரணான வகையில் பேசியதால், காரை அதிரடியாக சோதனையிட்ட காவல்துறையினர், அதில் இருந்து 20 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
வழக்கமான இடங்களில் கஞ்சா விற்பனை செய்வதற்கு நெருக்கடிகள் அதிகரித்ததால், சொகுசு காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாகவும் ஆந்திரா மற்றும் தேனியில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. கஞ்சாவுடன் 2.40 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்தனர்.
இதேபோல், ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம் குடியிருப்புப் பகுதியில் காவல்துறையினர், நடத்திய சோதனையில் செல்வி என்ற பெண்ணிடம் 69,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெருந்துறையில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு கிலோ கஞ்சாவை வைத்திருந்த சுரேஷ், அப்துல் ரஹ்மான் மற்றும் பவானியில் பழனியம்மாள், ராமநாதன், பூங்கொடி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், போதைக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 43 மயக்க மருந்துகளை வைத்திருந்த மூன்று பேரை சித்தோடு காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் இருந்து 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.