பழனி முருகன் கோவிலுக்கு கணவனுடன் வந்த பெண்ணை தங்கும் விடுதிக்கு கடத்திச் சென்று சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் புகார் எழுந்தது. இதுதொடர்பாக புகார் வாங்க பழனி காவல்துறையினர் மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு கேரள டிஜிபி அனில்குமார் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு காவல்துறை கேரளா விரைந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், மருத்துவர்களிடம் அந்தப் பெண், தான் பழனி கோவிலுக்குச் சென்றபோது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் தன் கணவரைத் தாக்கிவிட்டு தங்கும் விடுதிக்கு தன்னை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ந்த மருத்துவர்கள் கண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 19ஆம் தேதி பழனி முருகன் கோவிலுக்கு கணவருடன் சென்றபோது கணவரை அடித்து விரட்டிவிட்டு தன்னை தங்கும் விடுதிக்கு கடத்திச் சென்றதாகவும், பின்னர் மூன்று பேர் கொண்ட கும்பல் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கண்ணீருடன் அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தச் சம்பவத்தன்று இது தொடர்பாக பழனி அடிவாரத்தில் உள்ள காவல்துறையிடம் புகார் அளிக்க முயன்றபோது அவர்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர் என்றும், வேறு வழியின்றி சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டதாகவும் அந்தப் பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி காவல் நிலையத்தில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த விவகாரம் குறித்து அறிந்த கேரள டிஜிபி அனில்குமார், பழனி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதியிருந்தார். புகார் நேரடியாக டிஜிபிக்கே சென்ற நிலையில், இதில் அதிரடி நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவெடுத்து, ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ள கேரளா விரைந்துள்ளனர். புகாரின் உண்மைத் தன்மையை அறிய தனிப்படை கேரளா விரைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், கரோனா ஊரடங்கால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் பெண் பழனி கோவிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற முரணான தகவல்கள் குறித்து தனிப்படை விசாரிக்க இருக்கிறது.