உளுந்தூர்பேட்டை பட்டதாரி இளைஞர் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் பழைய, புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரித்து சாதனை படைத்ததோடு மேலும் கின்னஸ் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை டேனிஷ்மிஷின் தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன்ராஜு. பட்டதாரியான இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் சேகரித்து வைத்துள்ளார். பள்ளி பருவ காலங்களில் நாணயங்கள் சேகரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பழைய ரூபாய் நோட்டுகள் கரன்சி மற்றும் நாணயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் .
கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மன்னர்கள், குறுநில மன்னர்கள் காலத்திலிருந்த நாணயங்கள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்,அதன் பிறகு வந்த காகித ரூபாய் நோட்டுகள், பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் 1847-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் புழக்கத்தில் இருந்த கரன்சிகளை சேகரித்து வைத்துள்ளார்.
இதேபோல் மைசூர் மகாராஜா, திப்புசுல்தான், நிஜாம்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ரூபாய்களும் இந்தியாவின் முதல் கவர்னர் ஓபர்ன்ஸ்மித் காலத்தில் எந்த ரூபாய் நோட்டுகளும் வெளிவராத நிலையில் இரண்டாவது கவர்னர் ஜே பி டைலர் (1937) ஆண்டு வெளிவந்த 2 , 5, 10 ,100, 1000 ரூபாய் நோட்டுகளை முதல் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் பிளாஸ்டிக் நாணயங்களும் பாலிமர் சீட்டில் வந்த ரூபாய் நோட்டுகளும் வைத்துள்ளார்.
கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற உலக அளவிலான நாணயங்கள் மற்றும் கரன்சி கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் கரன்சிகள் மற்றும் நாணயங்கள் சேகரித்தும் அந்த ரூபாய் நோட்டுகளின் ஆண்டுகள் ,அந்த நாட்டின் மொழி, உலகத்தில் எந்த இடத்தில் உள்ளது என்று அனைத்து விவரங்களையும் தெரிவித்ததன் அடிப்படையில் நோபல் அமைப்பின் சார்பில் உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் 50 நாடுகளில் பயன்படுத்தப்பட்ட கரன்சிகள் மற்றும் நாணயங்களை சேகரித்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் கின்னஸ் சாதனை பெறுவதற்கான முயற்சியை ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.