டெல்லியில் இருந்து விமானத்தில் இன்று காலை சென்னை புறப்பட்ட பிரதமர் மோடி தற்பொழுது சென்னை வந்து சேர்ந்துள்ளார். அவரை வரவேற்க மேளம் தாளம் என சென்னை நகரே களைக்கட்டியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என். எஸ் கடற்படைத் தளத்துக்கு தற்போது செல்கிறார். அங்கிருந்து விழா நடக்கும் நேரு உள்விளையாட்டரங்கிற்கு காரில் சென்று சேர இருக்கிறார் மோடி.
இன்று பிரதமர் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3,370 கோடியில் முடிந்த மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க சேவையை தொடங்கி வைக்கிறார். சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-ஆவது ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 293.40 கோடியில் 22.1 கிலோமீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை சென்னை துறைமுகம் எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய தளங்கள் வழியாக செல்லும். அதேபோல் கல்லணை வாய்க்காலை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 2,640 கோடியில் வாய்க்காலை நவீனப்படுத்துவதன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லும் திறன் மேம்படும். விழுப்புரம்-கடலூர்-மயிலாடுதுறை-தஞ்சை பிரிவுகளில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் ரயில் எரிபொருளுக்கான செலவில் நாளொன்றுக்கு 14 கோடியே 60 லட்சம் மிச்சமாகும்.
அதேபோல் சென்னைக்கு வருகை தரும் பிரதமர், புதிய அர்ஜூன் பீரங்கி வாகனத்தை ராணுவத்திற்கு அர்ப்பணிக்கிறார். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் பீரங்கி 71 புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார் பிரதமர் மோடி.