சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், "முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. அசாதாரண சூழலில் முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கை அனைவராலும் பேசப்படக்கூடிய வகையில் உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குழுக்கள் அமைத்து துறைரீதியான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. நியாய விலை கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் தடையின்றி கிடைக்கிறது. மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு சேர்ப்பதை உணவுத்துறை முறையாகச் செயல்படுத்தியுள்ளது.
ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்குக் கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு கூடுதல் அரிசி வழங்க ரூபாய் 438 கோடி நிதி ஒதுக்கி மத்திய தொகுப்பில் இருந்து அரிசி வாங்கப்பட்டது. உணவுத்துறை சார்ந்த விஷயங்களில் சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அம்மா உணவகங்களில் விலையின்றி ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. வேலையின்றி தவிக்கும் ஆட்டோ, முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு உதவி வருகிறது. தடை செய்யப்பட்ட 845 பகுதியிலுள்ள 2.93 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளுக்குச் சென்றே உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு இடத்திலும் உணவு கிடைக்கவில்லை என்ற பிரச்சனையே இல்லை.
அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார். 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டம் மூலம் அரசியல் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். 'ஒன்றிணைவோம் வா' திட்டம் மூலம் பெறப்பட்ட 98 ஆயிரம் மனுக்களில் போக்குவரத்து வசதி குறித்து இடம் பெறவில்லை. அரசின் மீது குறைசொல்ல வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட மனுக்கள், ஸ்டாலின் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பொறுப்பில்லாமல் செயல்படக்கூடாது." இவ்வாறு அமைச்சர் கூறினார்.