வேலூர் மாவட்டம் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி(65). இவரது கணவர் சந்திரன். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவரும் புவனேஷ்வரியை விட்டு சென்றுவிட்டார். இதனால் அவர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலைக் குறைவு இருப்பதால், இவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அரசின் நிதி உதவி ரூ. 1000த்தை மட்டும் பெற்று வாழ்கை நடத்தி வந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த ஆறு மாதமாக அரசின் நிதி உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. பின்னர் தனது சேமிப்பு பணத்தில் இருந்து எடுத்து வீட்டு வாடகையை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வீட்டின் உரிமையாளர் பணம் செல்லாது என்று சொன்னவுடன் புவனேஷ்வரி அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து ஜனவரி 12ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு இது குறித்து மனு அளித்தார். அந்த மனுவில், " தன்னுடைய சேமிப்பு பணம் ரூ.12,000 பழைய 500 ரூபாய் நோட்டுக்களாக உள்ளது. எனக்கு எழுத படிக்க தெரியாது. நான் படுத்த படுக்கையாக இருப்பதால் என்னால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் நான் சேமித்து வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்கிக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த மனுவை வாங்காத அதிகாரிகள், அந்த மனுவில் உள்ள செய்தியை மட்டும் படித்துவிட்டு வங்கி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். வாங்கி அலுவலர்கள் பழையே ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு காலக்கெடு முடிந்து விட்டதால், அவற்றை மாற்ற முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் புவனேஷ்வரியை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் மனமுடைந்த மூதாட்டி, கையில் பணமும் இல்லை. அரசின் உதவித்தொகை வேறு நின்றுவிட்டது. கையில் உள்ள பணமும் பழைய ரூபாய் நோட்டுக்களாகவே உள்ளன என கூறிக்கொண்டு கண்ணீர் வடித்த படியே வீடுதிரும்பினார்.
இந்த செய்தியை அறிந்த நக்கீரன் ஆசிரியர், பாதிக்கப்பட்ட புவனேஷ்வரிக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததோடு உடனடியாக, வேலூர் திமுக செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவுமான நந்தகுமாரிடம் இது குறித்து பேசியுள்ளார். இதையடுத்து நந்தகுமார் அந்த மூதாட்டியை வரவழைத்து, பழைய 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவருக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் சிபாரிசு செய்துள்ளார்.