Skip to main content

காவிரி ஆணையத்தின் தன்னதிகாரம் மீட்க வீட்டு வாயிலில் கண்டனப் பதாகையுடன் கருப்புக் கொடி ஏந்துவோம்! காவிரி உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் முடிவு!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

Cauvery Management Board issue

 

காவிரி உரிமையை பறிக்கும் இந்திய அரசை கண்டித்து வீட்டு வாயிலில் கண்டனப் பதாகையுடன் கருப்புக் கொடி ஏந்திப் போராடுவதென காவிரி உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு குழு கூட்டம் இன்று (01.05.2020)  காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் ஒருங்கிணைத்தார்.

சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய சனநாயக கட்சித் தலைவருமான மு. தமிமுன் அன்சாரி, காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த. மணிமொழியன், தமிழ்த்தேசிய பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அண்மையில் நடுவண் அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அதன் நீராற்றல் (ஜல்சக்தி) துறைக்குக்கீழ் ஒரு பிரிவுபோல் சேர்த்துள்ளதால் ஏற்படும் ஆபத்துகளையும், இழப்புகளையும் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் விளக்கினார்.

அதன்பிறகு ஒவ்வொருவரும் கருத்துகள் சொன்னார்கள். நிறைவில், இந்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை நடுவண் நீராற்றல்துறையில் சேர்த்ததை திரும்பப் பெறவேண்டும். மே 7 – வியாழன் அன்று மாலை 5 மணியிலிருந்து 5.30 மணிக்குள், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில், காவிரி உரிமையை பறிக்கும் இந்திய அரசைக் கண்டித்து வீட்டு வாயிலில் கண்டனப் பதாகையுடன் கருப்புக் கொடி ஏந்தி நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் உள்ளி்ட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 

சார்ந்த செய்திகள்