திருவண்ணாமலைக்கு, கரோனா தொடர்பான அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் செப்டம்பர் 4 -ஆம் தேதி முதல்வர் பழனிசாமி வர இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகம் முழுவதும் வண்ணம் பூசப்பட்டு, கூட்ட அரங்கு சீர் செய்யப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும்போது, கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கரோனா பரசோதனை மாவட்டம் முழுவதும் குறைக்கப்பட்டுள்ளது என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. அதற்குக் காரணம் மாவட்ட நிர்வாகம் தினமும் வெளியிடும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தே வருவதுதான்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் அதிகளவு கரோனா நோயாளிகள் இருந்தனர். தினமும் 100 நபர்களுக்கு குறையாமல் கரோனாவால், மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் தினசரி பட்டியலில், கடந்த சில தினங்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி 61 நபர்களும், 22ஆம் தேதி 87 நபர்களும், 23ஆம் தேதி 100, 24ஆம் தேதி 145, 25ஆம் தேதி 102, 26ஆம் தேதி 58, 27ஆம் தேதி 99, 28ஆம் தேதி 205 நபர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்படி வேகமாகக் குறைய வாய்ப்பேயில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு.
இது உண்மையா என மருத்துவ அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, பரிசோதனை செய்கிறோம், அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும்மில்லை என நழுவுகிறார்கள்.
இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தரப்பில் கேட்டபோது, ஆரம்பம் முதலே பரிசோதனை எண்ணிக்கை அதிகமாக வைத்திருந்தது திருவண்ணாமலை மாவட்டம். அதேபோல் பிறமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு பெரும்பான்மையானவரை தனி முகாமில் வைத்துப் பரிசோதனை முடிவுக்கு பின்பே அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் தொடக்கத்தில் அதிகளவு நோயாளிகள் வந்தனர். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மற்ற மாவட்டங்களில் செய்யவில்லை. நாம் முன்னெச்சரிக்கையாக எல்லா வசதிகளையும் செய்திருந்தோம், அனுமதித்தோம், உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களைக் குணமாக்கி அனுப்பினோம். இதனால் தற்போது நமது மாவட்டத்தில் எண்ணிக்கை குறைந்துவருகிறது. மற்ற மாவட்டங்கள் ஆரம்பத்தில் போதிய அக்கறை செலுத்தவில்லை. தற்போதுதான் மற்ற மாவட்டங்கள் அதிகளவில் பரிசோதனை நடத்துகின்றனர். பரிசோதனை அதிகரிக்கும்போது அதிகளவு நோயாளிகள் தினமும் கண்டறியப்படுகிறார்கள். அதனால் நம் மாவட்டத்தை விட அதிகமாக தெரிகிறது. இதுதான் காரணமே தவிர, பரிசோதனை எண்ணிக்கையைக் குறைக்கவில்லை.
கடந்த மாதம் 25 -ஆம் தேதி எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டதோ, அதே அளவில் தான் இன்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. சில தினங்கள் குறைந்த அளவு பாசிட்டிவ் கேஸ்கள் வருகிறது, பல நாட்கள் அதிகளவு வருகிறது. நீங்கள் நன்றாக தினசரி டேட்டாவை பாருங்கள், உண்மை தெரியும் என்றார்கள்.