தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வற்ற முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது.
பால், மருந்து, பத்திரிகை விற்பனைக் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. தளர்வற்ற முழு பொதுமுடக்கத்தையொட்டி தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். சென்னையில் சுமார் 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; அதேபோல் 200- க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் அண்ணா நகர், வடபழனி, தி.நகர், எழும்பூர் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் தடுப்புகளை அமைத்து மூடப்பட்டுள்ளன. அதேபோல், கத்திப்பாரா, ஜெமினி, கோடம்பாக்கம் மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.