திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பித்தளைப்பட்டி ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் தேர்தல் விதிகளை முறையாக பின்பற்றவில்லை. ஊராட்சியில் முக்கிய வீதியில் உள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை. இதுதவிர ஊராட்சி அலுவலகம் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் கூடிய மூன்று அரசு விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர்.
அவற்றை துணி போட்டு மூடவோ, ஸ்டிக்கர் போட்டு ஒட்டவோ இல்லாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது போல் வைத்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பித்தளைப்பட்டி ஊராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கோவில் ஒன்றுக்கு பிளாங்க் செக் (காசோலை) கொடுத்து வாக்கு சேகரிக்க முற்பட்டதாகவும், இதனை ஊராட்சிச் செயலர் கண்டுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊராட்சி செயலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அனைத்து வேட்பாளர்களும் கோவிலில் வாக்குக்கு பணம் தரமாட்டோம் என சத்தியம் செய்திருந்தாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று பித்தளைப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் ஆத்தூர் தொகுதி உட்பட மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு விளம்பரங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.