சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் அதிகரித்து வந்த கரோனாவின் பாதிப்பு, ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் அதன் வேகம் சற்று குறைந்திருக்கிறது. அடுத்த சில நாட்கள் மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்துக்கொண்டால் கரோனா முழுமையாகக் குறையும். முகக்கவசம் அணியாமல் வெளியே வராதீர்கள்; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர் இருந்தால், முகக்கவசம் அணிய வேண்டும்.
மற்ற மாநிலத்தைவிட தமிழகத்தில் கரோனா குறைவாக இருப்பதாக நினைத்து மக்கள் வெளியே வரக்கூடாது. தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை நான்காயிரம் என்ற அளவிலேயே இருந்தது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி வீணாவதை 5% ஆக குறைத்துள்ளோம். தமிழகத்தில் கரோனா பரிசோதனையை அரசு குறைக்கவில்லை. முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மக்களின் வருகை குறைந்ததால் சோதனை குறைந்தது. தமிழகத்தில் ஒரு லட்சம் அளவிலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை. ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்துக்கான சிறப்பு மையம் விரிவுபடுத்தப்படும். ஆக்சிஜன் உற்பத்தியைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி உள்ளவர்கள் கரோனா பரிசோதனை மையங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்." இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.