சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் நியாயவிலைக்கடை பணியாளர்களின் 30 அம்ச கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து வலிறுத்தி வருகிறது. விற்பனை முனையம் மற்றும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்ட நிலையிலும் பலவிதமான நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டு மன உளைச்சலுடன் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
பொதுவிநியோகத் திட்டத்திற்கென தனித்துறை அமைக்க வேண்டும், பொதுவிநியோக திட்டத்தை 100 சதவீதம் கணினி மயமாக்கி பயோ மெட்ரிக் டிஜிட்டல் முறையில் பொதுமக்களுக்கு விநியோக பணியை செய்யவேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடைபெறும் நியாயவிலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்யவேண்டும். நியாயவிலை கடைகளை கழிவறை வசதியுடன் அமைக்கவேண்டும். பணியாளர்களின் 30 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி கருப்பு துணிஅணிந்து போராட்டம் என்று அறிவித்து இருந்தோம். இதனை அறிந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனைதொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திவைத்துள்ளோம். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலே நியாயவிலைகடை பணியாளர்களுக்கு நல்லதீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும், வரும் 9ந்தேதி நடைபெறும் ரேசன்கடைபணியாளர்களின் போராட்டத்தில் நியாயவிலைகடை பணியாளர் சங்கத்தினர் கலந்துகொள்ளமாட்டார்கள் என்றார்.
வரும் மே மாதத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவுள்ளதாக கூறினார். இவருடன் மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா, தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் சேகர் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
-அ.காளிதாஸ்