புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
மேகதாது விவகாரம் தொடர்பாக சிறப்பு சட்டமன்றம் கூட்டி புதுச்சேரி மாநிலத்தின் கருத்தை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சர், பாராளுமன்ற உறுபினர்களை அழைத்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு வரைபடம் தயாரிக்க தன்னிச்சையாக மத்திய நீர்வள அமைச்சகத்திடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்குவது தொடர்பாக சம்பந்தபட்ட மாநில நீர்வளத்துறை செயலாளர்களை மத்திய அரசு அழைத்து பேசவில்லை.
கர்நாடக அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் மற்ற மாநிலங்களை வஞ்சிக்கின்றன.கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்ப பெறவில்லை என்றால் விவசாயிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
மதச்சார்பற்ற அணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என ராகுல் தெளிவாக கூறியுள்ளார். பா.ஜ.கவில் தற்போது கீரல் விழுந்துள்ளது, 5 மாநில தேர்தல் வெற்றி பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம், 2019 ஆம் ஆண்டு மாற்றம் ஏற்படும். மதச்சார்பற்ற அணிகள் ஒன்றினைந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
பேட்டியின்போது காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம், பாராளுமன்ற பார்வையாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ, டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.