திருவள்ளுவர் திருநாள், சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்ப்ட்ட விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அதைத்தொடர்ந்து 2019- ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை செஞ்சி ராமச்சந்திரனுக்கு முதல்வர் வழங்கினார். பெரியார் விருதுடன் ரூபாய் 1 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரை வழங்கப்பட்டது.
அதேபோல் டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க. அருச்சுனனுக்கு வழங்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் விருதுடன் ரூபாய் 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பொற்கிழி வழங்கப்பட்டது. மேலும் திருவள்ளுவர் விருது- நித்யானந்த பாரதி, பேரறிஞர் அண்ணா விருது- கோ.சமரசம், பாவேந்தர் பாரதிதாசன் விருது- தேனிசை செல்லப்பா, கபிலர் விருது- வெற்றியழகன், உ.வே.சா. விருது- வே.மகாதேவன், இளங்கோவடிகள் விருது- கவிக்கோ ஞானச்செல்வன் (எ) திருஞானசம்பந்தம், தமிழ்த்தாய் விருது- சிகாகோ தமிழ் சங்கம், மாலன், முகமது யூசுப், மஸ்தான் அலி, சிவ. முருகேசன், வத்சலா, முருகுதுரை, நாகராசன் உள்ளிட்ட 10 பேருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டது.
இலங்கை முனைவர் சுபதினி ரமேஷ்க்கு மொழியியல் விருது வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ரூபாய் ஒரு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.