திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் வைகை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. நிலக்கோட்டை முதல் விளாம்பட்டி வரை உள்ள ஏழு கிலோமீட்டர் ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படும் கிணறுகள் மணல் கொள்ளையால் சரிந்து குடிநீர் மற்றும் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி பலமுறை புகார் கொடுத்தும் போராட்டம் நடத்தப்பட்டும் கூட அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் மணல் கொள்ளையர்களுக்கே சாதகமாக இருந்து வருகிறார்கள். இந்த வைகை ஆற்றில் இரவு நேர மணல் திருட்டு நடப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வினய்யிடம் பலமுறை வைகை ஆறு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை புகார் அளித்தார். புகார் அளித்த சில மணி நேரத்தில் அவரை அலைபேசியில் தொடர்புகொண்ட அப்பகுதி வருவாய் ஆய்வாளர் சரவணன் அண்ணாதுரையிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மணல் கொள்ளைக்கு ஆதரவாகத் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதனை மீறி நிலக்கோட்டை தாலுகாவில் வட்டாட்சியர் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் மணல் கொள்ளையர்கள் மாமுல் வாங்கிக்கொண்டு மணல் கொள்ளையர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக குற்றம் கூறினார்.